மரியான் பயோடெக் நிறுவனத்தின் 2 இருமல் மருந்துகளை இனி குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்திய தயாரிப்பு நிறுவனமான மரியான் பயோடெக் உற்பத்தி செய்யும் ஆம்ப்ரோனால் மற்றும் டாக் 1 (Doc-1 Max) ஆகிய இரண்டு இருமல் மருந்தை உட்கொண்ட 19 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்தது. அதாவது குழந்தைகள் அதிகப்படியான இருமல் மருந்தை எடுத்துக் கொண்டதாலும், அந்த மருந்துகளில் எத்திலீன் கிளைகால் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. இதனால், சுவாச நோயால் பாதிக்கப்பட்டு இந்த மருந்தை எடுத்துக் கொண்ட 21 குழந்தைகளில் 19 குழந்தைகள் இறந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆரம்பகட்ட ஆய்வகச் சோதனையில், டாக்-1 மேக்ஸ் சிரப்களில் எத்திலீன் கிளைகால் இருப்பது கண்டறியப்பட்டது. இது நச்சுத்தன்மை உடையது.

இந்நிலையில், உஸ்பெகிஸ்தான் நாட்டில் 19 குழந்தைகள் மரணம் தொடர்புள்ள மரியான் பயோடெக் நிறுவனத்தின் ஆம்ப்ரோனால் ( AMBRONOL) மற்றும் டாக் 1 (Doc-1 Max) ஆகிய இரண்டு மருந்துகளையும் இனி குழந்தைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், மரியான் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்புகள் அதற்குரிய வரைமுறைகளை பூர்த்தி செய்யவில்லை அதனால் அதை பயன்படுத்த வேண்டாம் என விளக்கம் அளித்துள்ளது.