கேரளா மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. எனவே, கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் ஜூலை 3ஆம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த குழுவினர் கேரளா மாநிலத்திற்கு விரைந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் கோழிக்கோடு, பத்தனம்திட்டா, மலப்புரம், ஆலப்புழா, இடுக்கி, திருச்சூர் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
மேலும், மேற்கண்ட மாவட்டங்களில் காற்றும் கடுமையாக வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக மலைபாங்கான பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் அம்மாநில மீன்வளத்துறையின் மூலம் மீனவர்களுக்கும் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் இதற்கு முந்தைய ஆண்டுகளில் பருவ கால மழைகள் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தின. இதனால் கேரள அரசு, முன்னரே மாநில பேரிடர் மீட்புக் குழுவுடன் ஆலோசித்து பல முன்னேற்பாடுகளைச் செய்து இருந்தது. அதன் காரணமாக இம்முறை பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.