தாய்மொழியான தமிழ் மொழியை கொலை செய்வதை ஏற்க முடியாது என்று வேதனை தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி, அலுவலக தகவல் தொடர்புகள் இலக்கண ரீதியாகவும், மொழி ரீதியாகவும் பிழை இல்லாமல் இருக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்தவர் அன்வர் அலி. இவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “என் மின் இணைப்புக்கான மின் மீட்டர் பழுதாக உள்ளது. இதனால் மின் கணக்கீட்டில் தவறு ஏற்படுகிறது. இதனால் பழுதான மின் மீட்டரை மாற்றவும், தவறான மின் கணக்கீட்டை சரி செய்ய மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், பிறப்பித்த உத்தரவில், “மண்டபம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மனுதாரருக்கு நிலுவை மின் கட்டணம் தொடர்பாக 24.3.2013-ல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘முதுநிலை மதிப்பீட்டு அலுவலரின் கள ஆய்வின் போது 20.11.2018 முதல் 23.3.2018 வரையிலான கன்ஸம்சன் யூனிட் இம்போர்ட்க்கு பதிலாகவும், எக்ஸ்போர்ட் யூனிட்டுக்கு பதிலாக இம்போர்ட் யூனிட் என தவறுதலாக உள்ளது என கண்டரியப்பட்டுள்ளது’ எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில் கடைசி வார்த்தையாக ‘கண்டறியப்பட்டுள்ளது’ என்பதற்கு பதிலாக ‘கண்டரியப்பட்டுள்ளது’ என உள்ளது. இதனால் அந்தக் கடிதத்தை அனுப்பிய பெண் அதிகாரியை அழைத்து விசாரித்தபோது அதிர்ச்சி மேலும் அதிகமானது. அந்த அதிகாரியால் கடிதத்தில் உள்ள தவறை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த தவறை சுட்டிக்காட்டிய போதும் அவர் அதை ஏற்கவில்லை.
கண்ணாடி வீட்டுக்குள் இருந்து மற்றவர்கள் மீது கல்லெறியக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். உயர் நீதிமன்றத்தின் சான்றழிக்கப்பட்ட உத்தரவுகளில் கூட எழுத்துப் பிழைகள், இலக்கண பிழைகள் உள்ளன. அழியா கவிஞர் பாரதியார் ‘ஆங்கிலத்தை சிதைப்பதையும், தாய்மொழியை கொலை செய்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது’ எனக் கூறியுள்ளார். இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரரின் மனு மீது உதவி செயற்பொறியாளர் 4 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.