ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கண்டகபள்ளி பகுதி அருகே ஞாயிற்றுக்கிழமை இரண்டு ரயில்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. இந்த ரயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதுவரை சுமார் 14 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் மனித தவறால்தான் இந்த விபத்து நிகழ்ந்திருக்கும் என கூறப்படுகிறது. சிக்னலை ஓவர் ஷூட் செய்து ஏற்கனவே ரயில் நிற்கும் தண்டவாளத்திலேயே மற்றொரு ரயிலை அனுமதித்தது தான் இந்த விபத்திற்கான காரணம் என கூறப்படுகிறது. இது எப்படி நடந்தது என தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் இளம் பெற்றோர்கள், புதுமண தம்பதியும் அடங்குவர். இந்தநிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை என்று உறவினர்கள் கதறும் வீடியோ வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
29 வயதான சல்லா சதீஷ் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். விசாகப்பட்டினத்தில் உள்ள நகைக்கடையில் விற்பனை அதிகாரியாக பணிபுரியும் இவர், திருவிழாவிற்காக விஜயநகரத்திற்கு சென்றுக்கொண்டிருந்த போது ரயில் விபத்தில் உயிரிழந்தார். இந்தநிலையில், அனகாபள்ளியில் தனது பெற்றோரைப் பார்க்கச் சென்ற அவரது 25 வயது மனைவிக்கு இந்த மரண செய்தியை கூறியது மிகுந்த மனவேதனையாக இருந்தது என்று உறவினர் ராஜூ வருத்தத்துடன் கூறினார்.
இதேபோல், அலமண்டா ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இறங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு கஞ்சுபராகி ரவி என்ற மின் ஊழியர் தனது மோட்டார் சைக்கிளை ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு, பொருட்களை கொள்முதல் செய்ய விசாகப்பட்டினம் சென்றுள்ளார். விசாகப்பட்டினத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் ரயில் மோதி இவர் உயிரிழந்தார். அவருக்கு 2 மகள்கள், அப்பா வீட்டிற்கு வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவரது மரணச் செய்தி குடும்பத்தினரை நிலைகுலைய செய்தது. குழந்தைகளுக்கு எப்படி சொல்வதென்று தெரியவில்லை என்றும் இனி இந்தக் குடும்பத்தை யார் பார்த்துக் கொள்வார்கள்?” என்று அவரது உறவினர் ஆனந்த் அழுது கொண்டே கூறியது காண்போரை கண்கலங்க செய்தது.