தெலுங்கில் கம்பெனி, சத்யா, சர்கார் போன்ற படங்களை இயக்கியவர் ராம் கோபால் வர்மா. அவ்வப்போது தனது கருத்துகள் மூலம் சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ரஜினி பற்றி அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர் “ ஒரு நடிகருக்கும் ஒரு நட்சத்திரத்திற்கும் உள்ள வித்தியாசம் உள்ளது. நடிப்பு என்பது ஒரு கதாபாத்திரத்தைப் பற்றியது; ஒரு நட்சத்திரம் என்பது ஒரு பெர்ஃபாமன்ஸை பற்றியது. இந்த இரண்டுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வித்தியாசம் உள்ளது.. ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகரா என்றால் எனக்கு தெரியவில்லை.” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் “ ஸ்லோ மோஷன் இல்லாமல் இருந்திருந்தால், ரஜினிகாந்த் இருந்திருக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. பாதி படத்தில் ரஜினிகாந்த் எதுவும் செய்யாமல் மெதுவாக நடப்பதைப் பார்ப்பது ரசிர்களுக்கு பிரச்சினையில்லை.
அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் போன்ற நட்சத்திரங்கள் அவர்களின் ரசிகர்களால் வணங்கப்படுகிறார்கள், தங்களின் வாழ்க்கையை விட பெரிய பிம்பம் சாதாரண வேடங்களில் நடிப்பதை கடினமாக்குகிறது. அவர்களின் மகத்தான புகழும், உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்தும் அவர்களை வெறும் நடிகர்களாக மட்டுமல்லாமல், கலாச்சார அடையாளங்களாகவும் மாற்றியுள்ளன.
இதனால் அவரின் ரசிகர்கள் அவரை ஒரு ஸ்டாராகவே பார்ப்பார்கள். வேறு எந்த வேடத்திலும் ரஜினி, அமிதாப் போன்ற நடிகர்களை பார்ப்பது கடினம். இந்த நட்சத்திரங்களைப் பொறுத்தவரை, அவர்களின் உண்மையான சுயத்திற்கும் அவர்கள் நடிக்கும் கதாபாத்திரத்திற்கும் இடையிலான வேறுபாடு மங்கலாகிவிடும், மேலும் அவர்களின் வாழ்க்கையை விட பெரிய பொது பிம்பத்துடன் ஒத்துப்போகாத கதாபாத்திரங்களை ஏற்றுக்கொள்வது இந்த உச்ச நடிகர்களுக்கு எளிதான விஷயம் அல்ல. ஒரு நட்சத்திரம் ஒரு சாதாரண கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, அது ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ராம் கோபால் வர்மா அமிதாப் பச்சன் நடித்த ஒரு படத்தைப் பார்த்ததை நினைவு கூர்ந்தார். அப்போது “ ஒரு படத்திற்கு அவரது கதாபாத்திரத்திற்கு வயிற்று வலி இருந்தது. நான் அந்தக் காட்சியை வெறுத்தேன். அமிதாப் பச்சனுக்கு வயிற்று வலி இருப்பதை நான் பார்க்க விரும்பவில்லை. எனவே நீங்கள் எப்போதும் அவர்களை கடவுள்களை போலப் பார்க்கிறீர்கள். கடவுள்களால் கதாபாத்திரங்களாக மாற முடியாது.” என்று தெரிவித்தார்.
45 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராகவே வலம் வரும் நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான். அபூர்வ ராகங்கள் படத்தில் தொடங்கிய அவரின் திரைப் பயணம் இன்றும் தொடர்கிறது. ரஜினி படங்கள் என்றாலே பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளும். எனவே பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றும் ரஜினி அழைக்கப்படுகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான வேட்டையன் படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் படம் வசூல் ரீதியில் வெற்றிப் படமாகவே அமைந்தது.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இதை தொடர்ந்து ஜெயிலர் 2 படத்திலும் நடித்து வருகிறார். இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பிசியான நடிகராக வலம் வருகிறார். இந்த நிலையில் ரஜினி குறித்து ராம்கோபால் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.