தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதற்கிடையே, வங்கக் கடலில் இன்றைய தினம் புயலும் உருவாக இருக்கிறது. இதனால், கனமழை காலத்தில் பேருந்துகளை மிகவும் கவனமாக இயக்க வேண்டுமென ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
அரசு விரைவு பேருந்துகள் இயக்கம் குறித்து, காணொலி மூலம் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு அதன் நிர்வாக இயக்குனர் மோகன் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் தொலைதுார பேருந்துகளை, சாலைகளில் கவனத்துடன் இயக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல, சுரங்கப்பாதையில் தண்ணீர் குறைவாக இருப்பதால், பயணியர் பேருந்தை இயக்க சொன்னாலும், மாற்று வழிகளையே ஓட்டுநர்கள் பயன்படுத்த வேண்டும். பணிமனைகளில் மழைநீர் தேங்காத வகையில், வடிகால்கள் சரிவர இருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதேபோல, மழையின்போது பேருந்துகளில் தண்ணீர் ஒழுகுவது, சாய்வு இருக்கைகள் சரிவர இயங்காதது போன்ற புகார்கள் வந்தால் உடனடியாக கிளை மேலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு அறிவுரைகள் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.