சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேளப்பிடாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி. பட்டியலினத்தைச் சேர்ந்தவரான இவர், கல்லூரியில் படித்து வருகிறார். பிப்.12ஆம் தேதி இவர், தனது புல்லட்டில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அதே ஊரில் வசிக்கும் 3 இளைஞர்கள் அவரை வழிமறித்து, “பட்டியலின சாதியில் பிறந்த நீ, எப்படி புல்லட் வண்டியை ஓட்டலாம்? எனக்கூறி அய்யாசாமியின் கையை அரிவாளால் வெட்டியுள்ளனர். மேலும், அவரது வீட்டையும் சூறையாடினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வல்லரசு, ஆதிஸ்வரன் மற்றும் வினோத் ஆகிய 3 பேரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவரின் சகோதரர் முனியசாமி செய்தியாளர்களுக்கு அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், “எங்களை இழிவாக ஏதோ சாக்கடைய பார்க்கிற மாறி பார்க்கிறார்கள். எங்களை ஒரு மனுசனாவே மதிப்பதில்லை.
நாங்கள் மாடி வீடு கட்டியதில் இருந்தே எங்களுக்கு பிரச்சனை கொடுக்க ஆரம்பித்தனர். ஜன்னலை உடைப்பது, மின்சார இணைப்பை துண்டிப்பது, தண்ணீர் தொட்டியை உடைப்பது போன்ற பிரச்சனைகளை செய்து வந்தனர். நாங்கள் இதுதொடர்பாக போலீசாரிடமும் தெரிவித்தோம். அதேபோல், புதிதாக புல்லட் வாங்கிய பிறகு நாங்க போகிற பாதையில் நீ போக கூடாது எனக்கூறி தொல்லை கொடுத்தனர்.
இந்நிலையில், புதுவண்டியில் என் தம்பி சென்றதை பொறுக்க முடியாமல், சாதி பேரைச் சொல்லி கெட்டவார்த்தைகளால் திட்டியுள்ளனர். பின்னர், கையை வெட்டியுள்ளனர். ரத்தத்துடன் உயிருக்கு பயந்து வீட்டுக்கு ஓடி வந்த தம்பியை, மருத்துவமனையில் அனுமதித்தோம். மேலும் யாருமில்லாத வீட்டில் அத்துமீறி, சேர், கண்ணாடி, ஜன்னல், ஸ்விட்ச் பாக்ஸ், டியூப் லைட் என அனைத்தையும் அடித்து நொறுக்கியுள்ளனர். ‘உங்களால என்னடா பண்ண முடியும்? முடிஞ்சா வாழ்ந்து பாருங்கடா”னு சொல்லி கொலை மிரட்டல் விடுக்கின்றனர். நான் பி.எஸ்சி பட்டதாரி. என் தம்பி இப்போது பி.எஸ்சி படித்து வருகிறான். அவன் கையை வெட்டியதால், தற்போது அவனுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.