வசதிகளும், தொழில்நுட்பமும் பெருக பெருக மோசடிகளும், குற்ற செயல்களும் அதிகரித்து வருகின்றன. சோஷியல் மீடியாக்களில் இந்த மோசடிகள் அதிகமாகிவிட்டது. நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட்களில் முதலீடு செய்தால், ஓவர்நைட்டில் பணக்காரராகிவிடலாம் என்றெல்லாம் ஆசை வார்த்தைகளை சொல்லி, மயக்குகிறது அந்த கும்பல். இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என பாகுபாடில்லாமல் மாட்டிக் கொள்கிறார்கள்.
அந்தவகையில், திருச்சியில் மட்டும் 6 மாதங்களில் 20-க்கும் மேற்பட்ட ஆன்லைன் மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். பலமுறை விழிப்புணர்வு கொடுத்தும், பலர் மோசடி வலையில் விழுந்து கொண்டே இருக்கிறார்கள். இப்போது கடன் செயலி (லோன் ஆப்) என்ற ஒன்றை புதுசாக ரிலீஸ் செய்திருக்கிறார்களாம். ஆண்ட்ராய்டு செல்போன்களில் ப்ளே ஸ்டோரில், இதுபோன்ற செயலிகள் நிறைய வலம்வருகின்றன. இதனை நாம் டவுன்லோட் செய்து அப்டேட் கொடுத்தால், வாடிக்கையாளரின் ஆதார், பான் விவரங்களை பதிவிட சொல்கிறார்கள். பிறகு, நம்முடன் நட்பாக பழகி, நம்முடைய காண்டாக்ட் லிஸ்ட் மொத்தத்தையும் எடுத்து விடுவார்கள்.
நாம் ரூ.5,000 கடன் கேட்டு அப்ளை செய்தால், அடுத்த சில நிமிடங்களில் பிடித்தம் போக ரூ.3000 அல்லது ரூ.4000 நம்முடைய வங்கிக்கணக்கிற்கு வந்துவிடும். பிறகு, அந்த கும்பல் ஒரு வாரத்தில் இந்த தொகைக்கான வட்டியுடன் ரூ.5500, ரூ.6000 செலுத்த வேண்டும் என்று மிரட்டுகின்றனர். அதுமட்டுமின்றி, நாம் பதிவிடும் ஆதார், பான் கார்டுகளில் இருக்கும், பெண்களின் போட்டோக்களை மார்பிங் செய்து, அதை ஆபாசமாக சித்தரித்து, அதையும் வாட்ஸ் அப்பில் பதிவிடுகின்றனர்.
முதலில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மிரட்டல் விடுப்பார்கள். அதன்பிறகு பணம் தரவில்லை என்றால், வீடியோக்களை அனுப்பி மிரட்டுவார்கள். இது தொடர்பாக தினமும், சைபர் கிரைம் போலீசாருக்கு நான்கைந்து புகார்கள் வருகிறதாம். இந்த கும்பலிடம், அவசரத்திற்கு கடன் வாங்கி கொண்டு, நிறைய இளம்பெண்கள், குடும்ப பெண்களும் சிக்கி கொண்டுள்ளனர். அதனால், இதுபோன்ற செயலிகள் கடன் தருவதாக சொன்னதால், ரிசர்வ் வங்கி அங்கீகரித்த நிறுவனம் தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.