தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு இடங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. அதன்படி, நேற்று 12 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி பதிவாகியுள்ளது. கரூர் மாவட்டம் பரமத்தியில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தாண்டில் தமிழ்நாட்டில் இதுதான் அதிகபட்ச வெப்பநிலை. சேலம் 106, ஈரோடு 105, வேலூர், திருச்சியில் தலா 104, திருத்தணி, திருப்பத்தூர், மதுரை நகரில் தலா 103, பாளையங்கோட்டை, தஞ்சையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
இதனை சமாளிக்க முடியாமல், முதியோர், குழந்தைகள், கர்ப்பிணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், குழந்தைகளின் நலன் கருதி கோடைக்காலம் முடியும் வரை மழலையர் பள்ளிகளை திறக்க வேண்டாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் அடுத்தடுத்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.