திமுககாரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை என முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில், வழக்கமாக நான் ‘உங்களில் ஒருவன் பதில்கள்’ மூலமாக உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால், இப்போது இந்த வீடியோ மூலமாக மற்றொரு முக்கியமான விஷயம் பற்றிப் பேசப் போகிறேன்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை மூலமாக கொடுக்கப்படுகிற அநியாயமான தொல்லைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல் என்பதில் யாருக்கும் கொஞ்சமும் சந்தேகமில்லை..! 10 ஆண்டுக்கு முன்னர் உள்ள பழைய புகாரை வைத்து, 18 மணி நேரம் அடைத்து வைத்து, மன அழுத்தம் கொடுத்து, மனரீதியாகவும் – உடல் ரீதியாகவும் பலவீனப்படுத்தி, உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இதயநோயை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால், இதைவிட அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் இருக்க முடியுமா?
செந்தில் பாலாஜி மேல் புகார் இருக்கும் என்றால், அது தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு இருக்கும் என்றால், அவரை அழைத்து விசாரணை நடத்துவதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஓடி ஒளியக் கூடிய அளவுக்கு அவர் சாதாரணமானவர் இல்லை..! அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர். சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அதுவும் இரண்டாவது முறையாக அமைச்சராக இருக்கிறார். நாள்தோறும் பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர். அப்படிப்பட்டவரை, ஏதோ தீவிரவாதியைப் போல அடைத்து வைத்து விசாரிக்க என்ன அவசியம் இருக்கிறது..?