தற்போது உள்ள காலகட்டத்தில், பலருக்கு இருக்கும் பிரச்சனை, கொழுப்பு கல்லீரல்.. தவறான உணவுப் பழக்கவழக்கங்கள், மது அருந்துதல் போன்ற சில காரணங்களால் கல்லீரல் செல்களில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து விடுகிறது. இப்படி கல்லீரலில் அதிகபடியான கொழுப்பு சேரும்போது, கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு அதன் செயல்பாடு மந்தமாகிறது. இந்த பிரச்சனையை நாம் கண்டுக்கொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டால், கல்லீரல் அழற்சி மற்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
அது மட்டும் இல்லாமல், வயிற்றின் வலது பக்கத்தில் வலி, சோர்வு, பலவீனம், எடை இழப்பு மற்றும் கால்களில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். கொழுப்பு கல்லீரல் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் போது, நமது முகத்தில் சில அறிகுறிகள் தெரியும். அந்த அறிகுறிகளை கண்டவுடன் நாம் சிகிச்சை எடுத்துவிட்டால் விரைவில் இதன் பாதிப்பிலிருந்து குணமடையலாம். கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறிகள் என்ன என்பதைப்பற்றி பார்ப்போம்..
முகப்பரு: முகத்தில் பருக்கள் அடிக்கடி ஏற்பட்டால், அதை அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. கொழுப்பு கல்லீரல் நோய் இருக்கும் போது முகத்தில் பருக்கள் ஏற்படும். கல்லீரலில் நச்சுகள் குவிவதால் அதன் விளைவாக முகத்தில் பருக்கள் ஏற்படும்.
மஞ்சள் நிறத்தில் சருமம் மாறுவது: கல்லீரல் சரியாக செயல்படவில்லை என்றால், பிலிரூபின் எனப்படும் மஞ்சள் நிறப் பொருள் நமது உடலில் உருவாகும். இதனால், உங்கள் முகம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகி, கல்லீரலை பரிசோதிக்க வேண்டும்.
முகத்தில் சிவப்பு புள்ளிகள்: உடல் மற்றும் முகத்தில் சிவப்பு புள்ளிகள் சிலந்தி வலை போல் இருப்பதற்கு ஸ்பைடர் ஆஞ்சியோமாஸ் (spider angiomas) என்று கூறப்படுகிறது. அப்படி சிவாப்பு புள்ளிகள் இருப்பது, கல்லீரல் செயலிழப்பின் அறிகுறியாக இருக்கலாம். அதனால் இந்த அறிகுறி உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதித்து விடுங்கள்..
கண்களுக்குக் கீழே வீக்கம்: நீண்ட நாட்களாக கண்களுக்கு கீழ் உங்களுக்கு வீக்கம் இருந்தால், அது கொழுப்பு கல்லீரல் அறிகுறியாக இருக்க வாய்ப்பு உண்டு. அதனால், கண்களுக்கு கீழ் பை போல வீக்கம் இருந்தால் அதை அலட்சியப்படுத்த வேண்டாம்.
தோல் வறட்சி மற்றும் அரிப்பு: கொழுப்பு கல்லீரல் பிரச்சனை இருந்தால், தோல் வறண்டு போவதோடு, அரிப்பு ஏற்படும். அதனால், இந்த அறிகுறி உங்களுக்கு இருந்தால் காலதாமதம் செய்யாமல், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.