கள்ளக்காதலை கைவிட மறுத்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி புவனேஷ்வரி. இவர்களுக்குக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், புவனேஷ்வரிக்கும் அண்ணாநகர் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவருக்கும் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இது பற்றி அறிந்த கணவன் சுரேஷ், அந்த நபருடன் பேசுவதை நிறுத்திக்கொள்ளுமாறு கண்டித்துள்ளார். ஆனால், மனைவி புவனேஷ்வரியால் அது முடியவில்லை. அப்படி நேற்றிரவும் தனது ஆண் நண்பரிடம் புவனேஷ்வரி செல்போனில் பேசி வந்துள்ளார். இதைப்பார்த்துக் கடுப்பான கணவன் சுரேஷ் மனைவியை மீண்டும் கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த புவனேஷ்வரி வீட்டில் அனைவரும் உறங்கிய பிறகு, மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்துள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.