திமுக மட்டும்தான் மிகவும் புத்திசாலித்தனமான கட்சி என நினைக்க வேண்டாம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.
இலவசங்களை அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக வழங்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நடந்து வருகிறது. இதில், ஏற்கெனவே திமுக சார்பில் இலவசங்களை அளிப்பதற்கு ஆதரவு நிலைப்பாட்டுடன் தனியாக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த வழக்கில் திமுக அறிவிக்கும் இலவசங்களை மறைமுகமாக குறிப்பிட்டே எதிர்தரப்பு மனுதாரர்களும், வழக்கறிஞர்களும் தங்கள் வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.
அதற்கு தலைமை நீதிபதி, தேர்தல் சமயத்தில் முன்வைக்கப்படுகிற தேர்தல் வாக்குறுதிகளை மட்டும் நிறுத்த வேண்டும் என நினைக்கிறீர்களா? அல்லது ஒட்டுமொத்தமாகவே இலவசங்கள் அறிவிக்கப்படக் கூடாது என கேட்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார். மேலும், கிராமப்புற மாணவிகளுக்கு சைக்கிள் தருவது அவர்கள் கல்வி கற்று பயனடையவே என்றும், மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமங்களுக்கு கால்நடைகள் வழங்குவது வாழ்வாதாரத்தை முன்னேற்றும் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். இதுபோன்ற திட்டங்களை கண்மூடித்தனமாக இலவசம் எனக் கூறவில்லை என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, தொலைக்காட்சி விவாதங்களில் நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், இந்த இலவசங்கள் சம்பந்தமான உச்சநீதிமன்றத்தின் வழக்கு விசாரணையை சுட்டிக்காட்டி அவர் முன்வைத்த வாதங்கள் ஆட்சேபனைக்கு உரியது என்று சில வழக்கறிஞர்கள் விவாதத்தை முன்வைத்தனர். அதற்கு திமுக வழக்கறிஞர் வில்சனிடம், ”திமுக மட்டும்தான் மிகவும் புத்திசாலித்தனமான, சாதுர்யமான கட்சி என நினைக்க வேண்டாம். பல விவகாரங்கள் குறித்து பேசாமல் தவிர்ப்பதால் அது குறித்து அறியாமல் இல்லை என நினைக்க வேண்டாம். நாங்களாக இந்த வரம்புக்குள் வரவேண்டாம் எனவும், நாடாளுமன்றம் இந்த விவகாரத்தில் ஒரு முடிவெடுப்பார்கள் எனவும் நினைத்திருந்தோம். முதலில் இதுகுறித்து முடிவெடுக்க குழு அமைக்கப்பட வேண்டும்” என்று தலைமை நீதிபதி காட்டமாக பேசினார்.
இந்நிலையில், வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.