வாக்குக்கு பணம் கொடுக்காமல் வெல்ல முடியாது என அனைவரும் நம்புகிறார்கள். ஆனால், நாங்கள் அப்படிப்பட்ட வெற்றியே தேவையில்லை என்று நினைக்கிறோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “எல்லோருமே கூட்டணி கூட்டணி என்று தான் பேசுகிறார்கள். ஒருவராவது கொள்கையை பற்றி பேசுகிறார்களா..? எனக்கு கூட்டணி தேவைப்படல. நான் தான் தமிழ்நாட்டில் பெரிய கூட்டணி வைத்திருக்கிறேன். 8 கோடி மக்களை நம்பி, அவர்களுக்காக நாங்கள் நிற்கிறோம். என்னையும் அந்த சாக்கடையில் தள்ள வேண்டாம்.
எங்களுக்கான அணி, எங்களின் கொள்கையையும், கோட்பாட்டையும் ஏற்று வர வேண்டும். அது இந்திய திராவிட கட்சிகள் இல்லை. அதற்கு எதிராகத்தான் நாங்கள் கட்சியை தொடங்கியிருக்கிறோம். வாக்குக்கு பணம் கொடுக்காமல் வெல்ல முடியாது என அனைவரும் நம்புகிறார்கள். ஆனால், நாங்கள் அப்படிப்பட்ட வெற்றியே தேவையில்லை என்று நினைக்கிறோம். ஊழலுக்கான முதல் ஊற்றுக்கண்ணே அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.
அது மாற்று அரசியலாக இருக்காது. ஏமாற்று அரசியலாகவே இருக்கும். வாக்குக்கு பணம் கொடுத்து வாங்கி வருகிற அதிகாரம் மக்களுக்கானதாக இருக்காது. முதலாளிகளுக்கானதாக இருக்கும். அப்படி இருக்கும்போது உழவர்கள், மீனவர்கள் போன்ற மக்களின் பிரச்சனைகள் காதில் விழாது. நாங்கள் 8.50% வாக்குகள் வாங்கியிருக்கிறோம். இது வளர்ச்சி இல்லையா..? நான் புலி. சுதந்திரமா காட்ல வேட்டையாடிட்டு முடிஞ்சத சாதிச்சிட்டு போகணும்” என்றார்.