உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் புறநகர் பகுதியில் தலையில் காயங்களுடன் கூடிய ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அந்தப் பெண், ராணுவ அதிகாரி ஒருவருடன் பழகி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றி வரும் ரமேந்து உபாத்யாய் என்பவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண்ணை அவர் கொலை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
ரமேந்து உபாத்யாய் (40), சிலிகுரியில் இருந்து டேராடூனுக்கு அண்மையில் மாறுதலாகி வந்துள்ளார். நேபாள வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரேயா ஷர்மா (30) என்பவரை முதன் முதலாக அங்குள்ள நடன பார் ஒன்றில் பார்த்துள்ளார். பின்னர், அந்தப் பெண்ணிடம் அவர் நட்பு ஏற்படுத்திக் கொண்டார். இவர்களது நட்பு திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இந்த நிலையில், ஸ்ரேயா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ரமேந்து உபாத்யாயை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் அவரை கொலை செய்தார். சம்பவத்தன்று உணவகத்தில் ஸ்ரேயாவுடன் இணைந்து மது அருந்திய ரமேந்து உபாத்யாய், அவரை வெளியில் சென்று வரலாம் என்று காரில் அழைத்துச் சென்றுள்ளார். புறநகரில் உள்ள ஒரு வெறிச்சோடிய இடத்தை அடைந்ததும் காரை நிறுத்திய அவர், அந்த பெண்ணின் தலையில் சுத்தியலால் பலமுறை அடித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து, அவரது உடலை சாலையோரம் வீசிவிட்டு அங்கிருந்து அவர் தப்பிச் சென்றதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.