செந்தில் பாலாஜியிடம் திமுக அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை, மதுபான குடோன், அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அவரது உறவினர்கள் வீடு, திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இந்நிலையில் தான், அமைச்சர் செந்தில் பாலாஜி திடீரென டெல்லி சென்று வந்தது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. டெல்லியில் பிரபல வழக்கறிஞர் முகுல் ரோத்தகியை செந்தில் பாலாஜி சந்தித்துப் பேசியுள்ளார்.
டாஸ்மாக் ஊழல் வழக்கு தொடர்பாக அவருடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. ஆனால், செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளிவந்த பிறகு தனக்காக வாதாடிய தனது வழக்கறிஞர் முகுல் ரோத்தகியை சந்திக்க டெல்லி சென்றிருந்தார் எனவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அதிமுக நிர்வாகி பெங்களூரு புகழேந்தி, செந்தில் பாலாஜி பாஜகவிடம் சரணடைந்து விட்டார். அரசுக்கும், முதல்வருக்கும் தெரியாத விஷயம் எனக்கு தெரியவந்துள்ளது. செந்தில் பாலாஜிடம் திமுக அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது தெரியாமல் இந்த அரசு இருந்தால், நிச்சயம் அனுபவிப்பார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.