சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் கவுசல்யா என்பவரும் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திருமணத்திற்கு முன்பே இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்ததால், கவுசல்யா கர்ப்பமானார். இதனால், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது, ரஞ்சித்குமார், தனது மனைவி கவுசல்யா மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, மனைவி கவுசல்யாவிடம், ரஞ்சித்குமார் நலம் விசாரித்தபோது, கவுசல்யாவின் உடலின் மீது கைவைத்துள்ளார்.
இதனால், கவுசல்யா வலி அதிகமாக இருக்கிறது என கூறவே, கோபமடைந்த கணவர் ரஞ்சித்குமார், மருத்துவர் மட்டும் உன் உடலை தொடும்போது வலி ஏற்படவில்லையா? எனக்கூறி தகராறு செய்துள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து கவுசல்யாவின் பெற்றோர், கவுசல்யாவையும், குழந்தையையும் செம்மஞ்சேரிக்கு அழைத்து வந்துள்ளனர். நேற்று காலை ரஞ்சித்குமார், மனைவி வீட்டிற்கு வந்து, கவுசல்யாவை புறப்பட சொல்லி கூறியிருக்கிறார். அப்போது, அங்கு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார், கவுசல்யாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், தலை மற்றும் காலில் பலத்த காயமடைந்த கவுசல்யாவை, பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது ஆத்திரம் தீராத ரஞ்சித்குமார், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 2 மாத கைக்குழந்தையின் காலை பிடித்து சுவரில் அடித்ததில், குழந்தையின் விலா எலும்பு நொறுங்கியது. மேலும், பின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு, குழந்தை வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரஞ்சித்குமாரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.