ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜனின் மகளை சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தல தோனி கொஞ்சி விளையாடும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 29வது லீக் ஆட்டத்தில் சென்னை – ஐதராபாத் அணிகள் மோதின. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் விளையாடவில்லை. எனினும், அவர் தனது குடும்பத்துடன் மைதானத்திற்கு வந்திருந்தார். ஆட்டம் முடிந்த பிறகு முன்னாள் வீரர்களான பிரையன் லாரா, டேல் ஸ்டைன், முத்தையா முரளிதரன் உள்ளிட்டவர்களுடன் தோனி பேசிக்கொண்டிருந்தார்.
அதன் பிறகு தமிழ்நாடு வீரர் நடராஜனின் குடும்பத்தினரை சந்தித்த தோனி, அவரது மகளிடம் கை கொடுத்து தன்னை அறிமுகம் செய்ய முனைந்தார். ஆனால், கை கொடுக்காமல் குழந்தை விளையாடியதை புரிந்துகொண்ட தோனி சிறிது நேரம் உரையாடினார். அப்போது எனக்கு மகள் இருக்கிறாள் என்று தோனி சொல்லவே, தம்பி இல்லையா என்று நடராஜனின் மகள் கேட்க, இல்லை இவ்வளவு உயரத்தில் ஒரு மகள் இருக்கிறாள் என்று தோனி சைகையால் கூறினார். பின்னர் நடராஜன் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.