கரண்ட் பில் செலுத்த காலக்கெடு முடிந்ததும், அடுத்த சில மணி நேரங்களில் உங்கள் வீட்டு ஃப்யூஸ் பிடுங்கப்படும் என்று கடைசி நேர அலர்ட் கொடுக்கும் வகையில் எஸ்.எம்.எஸ். அனுப்பும் புதிய ஏற்பாட்டை தமிழ்நாடு மின்சார வாரியம் செய்துவருகிறது.
தமிழ்நாட்டிற்கு மின்சேவை வழங்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் 2 மாதத்திற்கு ஒருமுறை மின் நுகர்வோரிடம் மின் கட்டணத்தை வசூல் செய்துவருகிறது.இந்த கட்டணத்தை செலுத்துவதற்கு உரிய காலக்கெடு விதிக்கப்படும். இதற்காக எஸ்.எம்.எஸ் மற்றும் இ-மெயில் மூலம் வாடிக்கையாளர்களுக்கு Tangedco நினைவுபடுத்தி வருகிறது. இருப்பினும் சிலர் உரிய காலத்திற்குள் கட்டணம் செலுத்துவது இல்லை. இதனால் திடீரென மின்சாரம் துண்டிக்கப்படுவது போன்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதாவது, காலக்கெடு முடிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் நேரில் வந்து ஃப்யூசை பிடுங்கி கொண்டு சென்று விடுவர். பலர் வேலைக்கு சென்று விடுவதால் எப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்பது கூட தெரியாது. அதன்பிறகு மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று கட்டணத்தை செலுத்தி, அதை அவர்கள் அப்டேட் செய்தால் தான் மின்சாரம் திரும்ப வரும்.
தற்போது நகர்ப்புறங்களில் 12 மணி நேரத்திற்குள்ளும், கிராமப்புறங்களில் 24 மணி நேரத்திற்குள்ளும் மின்சாரம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்படித்தான் விதிமுறைகளும் கூறுகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் புதிய ஏற்பாட்டை செய்ய முடிவு செய்துள்ளது. அதாவது, கடைசி நேர அலர்ட் கொடுக்கப் போகிறது. மின் கட்டணத்தை செலுத்த காலக்கெடு முடிந்ததும், அடுத்த சில மணி நேரங்களில் உங்கள் வீட்டு ஃப்யூஸ் பிடுங்கப்படும். மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்பதை தெரியப்படுத்தும் வகையில் எஸ்.எம்.எஸ் மறும் இ-மெயில் அனுப்பவுள்ளனர். இதனால் வாடிக்கையாளர்கள் உடனே அலர்ட்டாக வாய்ப்பு கிடைக்கிறது.
இவ்வாறு மின் கட்டணத்தை செலுத்தியதும் அடுத்த 6 மணி நேரத்திற்குள் மின்சாரம் மீண்டும் கிடைத்துவிடும்.பழைய விதிமுறைகளின் படி, 12 மணி நேரமும், 24 மணி நேரமும் ஆகாது. கிராமங்கள், நகரங்கள் என எந்தப் பகுதியாக இருந்தாலும் 6 மணி நேரம் தான் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கேற்ப மின் விநியோக விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.