அத்தியாவசியப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள், தங்களது குடும்ப அட்டையை பொருளில்லா குடும்ப அட்டையாக (NO COMMODITY CARD) மாற்றிக் கொள்ளுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால், ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் வாங்குவோரின் எண்ணிக்கையை பொறுத்தே ரேஷன் கடைகளுக்கும் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், ரேஷன் கார்டுகள் இருந்தும் பலர், ரேஷன் பொருட்களை வாங்குவதில்லை. ஏனென்றால், அவர்கள் வேலைகாரணமாக வெளியூர்களின் இருப்பதால், முறையாக ரேஷன் பொருட்கள் வாங்க முடிவதில்லை. இதனால், ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டும் பொருட்கள், அப்படியே தேக்க நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், சில இடங்களில் மீதமாகும் ரேஷன் பொருட்களை, மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்படுகிறது. இதனால், தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வாங்காதவர்களின் குடும்ப அட்டைகள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கான பொருட்களை ரத்து செய்யும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தான், நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”நீலகிரி மாவட்டத்தில் உள்ள அத்தியாவசியப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள், தங்களது குடும்ப அட்டையை பொருளில்லா குடும்ப அட்டையாக (NO COMMODITY CARD) மாற்றிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். எங்களுக்கு ரேஷன் பொருட்கள் பெற விருப்பமில்லை என்று தங்களது உரிமத்தை விட்டுக்கொடுப்பது தொடர்பாக www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் மாற்றிக் கொள்ளலாம். ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க முடியாதவர்கள், வாங்காதவர்கள் மற்றும் எங்களுக்கு ரேஷன் பொருட்கள் தேவையில்லை என்று நினைப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும்” என தெரிவித்துள்ளார்.