இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், துணை முதலமைச்சர் அறிவிப்பு வெளியாகுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின், வரும் 27ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். அங்கு கூகுள் நிறுவனத்தின் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை உள்பட பல்வேறு தொழில் அதிபர்களை சந்திப்பதோடு அமெரிக்கா வாழ் தமிழர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தான், இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட உள்ள வளர்ச்சி திட்டங்கள், தற்போது நடைபெற்று வரும் பணிகளை வேகப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. முதல்வர் முக.ஸ்டாலின் அமெரிக்கா செல்லும் நிலையில், அதற்கு முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படுமா என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இன்று நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவுகள் எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், அமைச்சரவையில் மாற்றங்கள் இருக்குமா என்கிற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. சமீபத்தில் அமைச்சர்கள் ராஜா கண்ணப்பன், கீதா ஜீவன் ஆகியோர் இனி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என அழைப்போம் என்கிற ரீதியில் பொதுமேடைகளில் பேசியிருந்த நிலையில், இந்த அமைச்சரவைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Read More : புதுசா வீடு கட்ட போறீங்களா..? அதிரடியாக வந்த மாற்றம்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!