தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் புதிய புதிய மாற்றத்தை நோக்கி நடைபோட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நீண்டதூர பேருந்து பயணம் என்றாலே, தமிழ்நாட்டை பொறுத்தவரை தனியார் நிறுவனங்கள்தான் சிறப்பான சேவைகளை வழங்கி வருவதாக பயணிகள் நினைக்கிறார்கள். ஏனென்றா, அரசு பேருந்துகளில் போதுமான அளவு வசதிகளும், சரியான பராமரிப்பும் இல்லை. அத்துடன், தாமதமாக செல்கின்றன என்பது போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த கருத்துக்களை மாற்றியமைக்கும் வகையில், தமிழக அரசு அடுத்தடுத்த அதிரடிகளை கையில் எடுத்தது. குறிப்பாக, விரைவு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள பேருந்துகளை புனரமைத்து, தனியார் பேருந்துகளுக்கு இணையான அளவில் சேவைகளை வழங்க முடிவு செய்யப்பட்டது.
போதுமான அளவுக்கு, புதிய பஸ்களையும் வாங்கவும், ஏசி பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், முடிவு செய்யப்பட்டது. மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 450 டவுன் பஸ்கள் வாங்குவதற்கான டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம், தன்னுடைய பஸ்கள் அனைத்தையுமே, புனரமைப்பதற்காக, டெண்டர் விடுக்கப்பட்டது.. இந்த டெண்டரின்படி பஸ்கள் புதுப்பிக்கப்படும்போது, அதற்கு புதிதாக மஞ்சள் நிறம் அடிக்கப்பட முடிவானது.
இது தொடர்பாக கடந்த மாதம், டிஎன்எஸ்டிசி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், மஞ்சள் நிறமாக்கி கொண்டிருக்கும் பஸ்களின் போட்டோக்களை வெளியிட்டிருந்தது. அப்போது வேறு என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட உள்ளோம் என்ற விவரத்தையும் குறிப்பிட்டிருந்தது. குறிப்பாக, பஸ்களில் தலையணையுடனான படுக்கைகள் அமைக்கப்பட உள்ளது. பேருந்துகளில் ஏற்கனவே இருந்த யூஎஸ்பி சார்ஜருக்கு பதிலாக சார்ஜிங் பாயிண்டுகள் அமைக்கப்பட உள்ளன. இருக்கை கவர்களில் துணிகளுக்கு பதிலாக, ரெக்சின்களை கொண்டு சீட் அமைக்கப்படும், ஜன்னல்கள் மற்றும் ரீடிங் லைட்டுகள் தரம் உயர்த்தப்படும், இன்னும் பராமரிப்பில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று அறிவித்திருந்தது.
இந்நிலையில், பேருந்துகளுக்கு மஞ்சள் நிற பெயிண்ட் அடிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. தமிழகத்தில் விரைவில் இயக்கத்துக்கு இவைகள் வரப்போவதாகவும் கூறப்படுகிறது. சென்னை, பெங்களூரு, திருச்சி, கரூரில் புதிய பஸ்கள் தயாராகி வருகின்றதாம். இவ்வாறு, தமிழகம் முழுதும் உள்ள 8 கோட்டங்களில் முழுபாகம் சேதமடைந்த, ஒழுகும் நிலையில் உள்ள பஸ்கள் சீரமைக்கப்பட உள்ளன. தமிழ்நாடு முழுதும் பயன்படுத்த, 1,000 புதிய பஸ்களை வாங்கவும், 500 பழைய பஸ்களை புதுப்பிக்கவும், 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பராமரிப்பு பணிகளும் வேகம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்பு, அதிமுக ஆட்சியில் பச்சை கலரில் பஸ்கள் இயக்கப்பட்டன.. பிறகு, பிஎஸ் 4 ரக பஸ் வருகையால், நீல நிறம் மாற்றப்பட்டது. அதற்கு பிறகு, இலவச பஸ் என அடையாளம் காண்பதற்காக, பாதி பிங்க் நிறத்தில் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்போது மஞ்சள் நிறமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.