2027ம் ஆண்டு வரை இந்திய அணியின் முன்னணி ஸ்பான்சராக பேன்டஸி ஸ்போர்ட்ஸ் கேமிங் தளமான ட்ரீம் 11 (Dream 11)ஒப்பந்தம் செய்துள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
2023ம் ஆண்டிலிருந்து 25ம் ஆண்டு வரையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்தே இந்திய அணியின் ஜெர்சியில் ட்ரீம்11 லோகோவுடன் விளையாடும். இதில் முதல் போட்டி ஜூலை 12ம் தேதி டொமினிகாவின் வின்ட்சர் பார்க் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, நான் ட்ரீம்11-ஐ வாழ்த்தி வரவேற்கிறேன். பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக இருந்து இப்போது முன்னணி ஸ்பான்சராக ட்ரீம்11 வளர்ந்துள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஐசிசி உலகக் கோப்பையை நடத்த நாங்கள் தயாராகி வரும் நிலையில், ரசிகர்களின் ஆர்வத்தை உயர்த்த இந்த ஒப்பந்தம் உதவும் என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
ட்ரீம் ஸ்போர்ட்ஸின் இணை நிறுவனர் ஹர்ஷ் ஜெயின் கூறுகையில், பிசிசிஐ மற்றும் இந்திய அணியின் நீண்டகால கூட்டாளியாக, ட்ரீம்11 எங்கள் ஒற்றுமையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் மகிழ்ச்சி அடைகிறது. ட்ரீம்11 இல், கிரிக்கெட் மீதான எங்கள் அன்பை ஒரு பில்லியன் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். மேலும் தேசிய அணிக்கு முன்னணி ஸ்பான்சராக மாறுவது பெருமை மற்றும் எங்கள் பாக்கியம் என்று கூறியுள்ளார்.
பைஜூஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் மார்ச் மாதம் முடிந்த நிலையில், ஸ்பான்சருக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டது. இதனை ஃபேண்டஸி கேமிங் ஆப் செயலி நிறுவனமான டிரீம் லெவன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வரும் 2027 ஆம் ஆண்டு வரையில் பைஜூஸ் நிறுவனம் இந்திய அணியின் ஜெர்ஸி ஸ்பான்ஸராக ரூ.358 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து பிசிசிஐ முறையாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.