தினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் மிதமான சுடு தண்ணீர் குடித்து வந்தால், நோய்கள் உங்களை நெருங்கவே நெருங்காது என கூறப்படுகிறது. வயிற்றை சுத்தப்படுத்துவதில் சுடு தண்ணீருக்கு இணையானது வேறெதுவுமில்லை என்கின்றனர். வெதுவெதுப்பான நீர் நமது உடலுக்குள் செல்லும் போது, முகத்தில் வேர்க்கும். இதன் மூலம் தேவையற்ற உப்பு போன்ற கழிவுகள் வெளியேறும். தினமும் போதுமான அளவு தண்ணீரை குடிப்பதால், நமது உடல் செயல்பாடுகளை எளிதாக்குவது மட்டுமின்றி, நமது ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
இந்நிலையில், வெந்நீர் குடிப்பதால் என்னென்ன மாற்றங்கள் நமது உடலில் நிகழும் என்பதையும், இதன் நன்மைகள் குறித்தும் பிரபல மருத்துவர் கௌதமன் ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார்.
➥ காலையில் எழுந்தவுடன் வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவோர், வெதுவெதுப்பான நீரை குடிக்கலாம். இதனால், உங்கள் செரிமானம் மேம்படும். மேலும் வயிறு உப்பசம், நெஞ்சு எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.
➥ சூடான அல்லது வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் உங்கள் சிறுநீரகம், கல்லீரலில் சேரும் அழுக்குகள் சுத்தமாகும். முக்கியமாக கொல்ஸ்ட்ரால் குறைவதை நீங்களே பார்க்கலாம்.
➥ அதேபோல், உங்கள் வெந்நீர் குடித்து வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது கடுமையான நோய்களுடன் எதிர்த்து போராட, நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்.
➥ தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால், உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும். மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் வருவதை தடுக்க முடியும்.
➥ அதேபோல், உடல் எடை குறைக்கவும், அதை சீராக வைத்துக் கொள்ளவும் வெது வெதுப்பான நீரை குடிக்கலாம். இது கொழுப்பை கரைக்க உதவுவதோடு, கலோரி எரியும் செயல்முறையை விரைவுபடுத்துகிறது.
➥ காலையிலேயே உடல் சோர்வாகவும், சோம்பேறி தனமாக இருப்பதாகவும் உணந்தால், வெந்நீர் குடிக்கலாம். இதனால், நாள் முழுவதும் நீங்கள் உற்சாகமாகவுன், சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும்.
➥ ஒவ்வாமை, அலர்ஜி, சைனஸ் உள்ளிட்ட பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் வெந்நீர் குடிக்க வேண்டும். மேலும் சளி, இருமல், சளி ஒழுகுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக அமையும்.
தொடர்ந்து 48 நாட்கள் வெந்நீர் குடித்து வந்தாலே உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றத்தை நீங்களே காணலாம். எனவே, தினசரி காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது முக்கியமான ஒன்றாகும்” என்று மருத்துவர் கௌதமன் ஸ்ரீவர்மா தெரிவித்துள்ளார்.