அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி 7 பேர் காயமடைந்த சம்பவத்தில் ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து வானவரம் மலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இந்த சம்பவத்தில் சாலையோர பள்ளத்தில் அரசுப் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்தனர். 2 பெண்கள் உட்பட 7 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இன்று காலை 08.10 மணிக்கு புறப்பட்டு, தவளைப்பட்டி செல்லும்போது கல்லுக்காடு என்ற பகுதியில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மேலும், இந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததற்கு ஓட்டுநரே காரணம் என தமிழ்நாடு போக்குவரத்துக் கழக சேலம் மண்டலம் நிர்வாக இயக்குநர் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்துக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பேருந்தில் பழுது ஏதும் இல்லாத நிலையில், ஓட்டுநர் செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கியுள்ளார். இதனால், பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்து சேலம் கோட்ட போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.