சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லா ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் நாளை முதல் தயாரிக்கப்பட உள்ளன. ஓட்டுநர் இல்லா ரயில்களின் முதல் சேவை 2026இல் தொடங்கப்படும். தொடக்கத்தில், இந்த ரயில்களில் ரோவிங் உதவியாளர்களை வைத்திருக்க மெட்ரோ திட்டமிட்டுள்ளது. அதாவது, கண்காணிப்பாளர்கள் உதவியுடன் டிரைவர் இல்லாத இந்த மெட்ரோ இயங்கும்.
இவர்கள் டிரைவர் இல்லாத மெட்ரோ சரியாக இயங்குகிறதா என்று கண்காணிப்பார்கள். அதிகாரிகளின் அறிவிப்பின்படி, 138 மூன்று பெட்டிகள் கொண்ட டிரைவர் இல்லாத ரயில்கள் 2ஆம் கட்ட திட்டத்தின் கீழ் வாங்கப்படும். இந்த ரயில்கள் மூன்று வழித்தடங்களுக்கு 3 ஒப்பந்தங்களில் வாங்கப்படும். மாதவரம் முதல் சிப்காட் (காரிடார் 3), லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி (காரிடார் 4) மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் (காரிடார் 5) காரிடர்களுக்கு இந்த ரயில்கள் வாங்கப்படும்.
ஆட்டோமெட்டிக் ஏஐ தொழில்நுட்பம், ஜிபிஎஸ், சிக்னல் ரீடிங், டைமிங் சீகுவென்ஸ் ஆகிய தொழில்நுட்பங்களை அடிப்படையாக வைத்து இந்த ரயில்கள் இயங்கும். இந்த ரயில்கள் பொது பயன்பாட்டிற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு ஒரு வருடத்திற்கு விரிவான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கான டிசைனிங் தற்போது செய்யப்பட்டு வருகிறது.
பூந்தமல்லி மற்றும் போரூர் இடையே இயக்கப்படும் டிரைவர் இல்லாத 26 ரயில்களின் முதல் பேட்ச் அடுத்த ஆண்டு மத்தியில் வழங்கப்படும். சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்படவுள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2027-க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 16 கிமீ இரண்டாம் கட்ட திட்டம் ₹61,843 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ளது.