ஷாஜகான்பூர் மாவட்டத்தில் இன்று காலை அடர்த்தியான மூடுபனி காரணமாக சாலை தெரியாததால் பயணிகள் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டம் அல்லாஹ்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஃபரூகாபாத் சாலையில் இன்று அதிகாலை, பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது வேகமாக வந்த லாரி மோதியது. தகவலறிந்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சைக்கு முன்னுரிமை வழங்குமாறும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து ஷாஜகான்பூர் எஸ்.பி அசோக் குமார் மீனா கூறுகையில், “ஜலாலாபாத் பக்கத்தில் இருந்து வந்த ஆட்டோ மீது லாரி மோதியதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் அடங்குவர்” என்று தெரிவித்தார்.
இப்பகுதியில் குளிர்காலங்களில் தொடர்ச்சியாக மூடுபனி நிலவும். அப்போது, சாலைப் போக்குவரத்து மிகவும் சவாலானதாக இருக்கும். அடர்த்தியான மூடுபனியால் குறைந்த தெரிவுநிலை காரணமாக இந்த விபத்து நேரிட்டுள்ளது.