சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சாலையில் வாகன ஓட்டிகளின் நடத்தையை சிசிடிவி மற்றும் ANPR கேமராக்கள் மூலமாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த கேமராக்கள் போக்குவரத்து போலீசாரின் “மூன்றாவது கண்” ஆகவே செயல்பட்டு வருகின்றன. சென்னையில், பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக 6,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் தினசரி பதிவு செய்யப்படுகின்றன. அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி அதிவேகமாக வாகனங்களை இயக்கினாலோ, தலைக்கவசம் அணியாமலோ சென்றால், உங்களை கேமரா படம் பிடித்து அபராதம் கட்ட வேண்டிய சலான் லிங்குடன் உங்களுக்கு அனுப்பப்படும்.
இந்நிலையில், சென்னை போக்குவரத்து போலீசார், பொதுமக்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதாவது, போக்குவரத்து விதிமீறல் அபராத ரசீது லிங்க்குகளை போலியாக அனுப்பி ஒரு கும்பல் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். மோசடி கும்பல் அனுப்பும் மெசேஜில் உள்ள லிங்க்கும், உண்மையான லிங்கும் கிட்டத்தட்ட ஒன்றுபோலவே இருக்கும். ஆனால், உண்மையான அபராத ரசீது லிங்க்குகள் “.gov.in” என்றே முடிவடையும். வெறுமனே “.in” என மட்டும் முடிவடையும் லிங்க்குகள் போலியானவை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
யாராவது சந்தேகத்திற்கிடமான இ-சலான் அபராத மெசேஜை பெற்றால், அவர்கள் உள்ளூர் காவல் நிலையத்தின் சைபர் கிரைம் பிரிவில் புகாரளிக்கலாம் அல்லது https://cybercrime.gov.in-இல் புகாரளிக்கலாம். மோசடி செய்பவர்கள் பொதுமக்களை போலி தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் பயன்படுத்தி தொடர்பு கொண்டு, நீங்கள் உடனடியாக அபராதம் செலுத்த வேண்டும் இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டுவார்கள். அவ்வாறு அழைப்பு வந்தால் புகாரளிக்கும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.