போக்குவரத்து விதிமீறல்களுக்கான இ-சலான் அபராத தொகையை 3 மாதங்களில் செலுத்தவில்லை என்றால், டிரைவிங் லைசன்சை ரத்து செய்யும் வகையில் புதிய விதிகளை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக அளவில் சாலை விபத்துக்கள் அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இங்கு, பெரும்பாலும் சாலை விதிகள் மீறப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், விதிமீறல்களும், அதனால் விபத்துகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மேலும், சாலை விதி மீறுவோருக்கு புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தப்படி கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதாவது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும். அதே தவறை மீண்டும் மீண்டும் செய்தால் ரூ.15,000 அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறை விதிக்கப்படலாம். அதேபோல், தலைக்கவசம் அணியாமல் சென்றால் ரூ.1,000 விதிக்கப்பட்டு வருகிறது.தற்போது போக்குவரத்து விதிமீறல்களுக்கு ஸ்பாட் பைன் போடப்பட்டு வருகிறது.
இ-சலான் முறையில் அபராதம் விதிக்கப்படுவதால், பல வாகன ஓட்டிகள் அபராத தொகையை செலுத்தாமல் உள்ளனர். தற்போது, இதற்கு செக் வைக்கும் விதமாகத்தான் மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை கையிலெடுத்துள்ளது. அதாவது, போக்குவரத்து விதிகளை மீறி அபராதம் விதிக்கப்பட்டால், அதை 3 மாதங்களுக்குள் செலுத்தும் நடைமுறையை அமலுக்கு கொண்டுவர உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அபராத தொகையை செலுத்த தவறும் பட்சத்தில், வாகன ஓட்டிகளின் டிரைவிங் லைசன்ஸையும் தற்காலிகமாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், ஒரே ஆண்டில் 3 முறை வாகன விதிமீறல்களில் ஈடுபட்டு, அபராதம் விதிக்கப்பட்டால், அவர்களின் டிரைவிங் லைசன்ஸ் குறைந்தது 3 மாதங்களுக்கு பறிமுதல் செய்யப்படும் போன்ற நடவடிக்கைகள் எடுப்பதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.