செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் பகுதி தனியார் மண்டபத்தில் இன்று காலை திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. முன்னதாக நேற்று மாலை வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. அப்போது, மேடையில் மணமகளுடன் நின்ற மணமகன் தகராறு செய்து கொண்டிருந்ததாகவும், அனைவரிடமும் அநாகரிமாக நடந்து போதையில் ரகளை செய்ததாகவும் பெண் வீட்டார் குற்றம்சாட்டி வரவேற்பு நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தினர். பின்னர் பெண் வீட்டார் தாழம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், மணமகன் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மாப்பிள்ளை ‘நான் செய்தது தவறு.. என்னை மன்னித்து விடுங்கள்’ என்று கைகூப்பி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார்.
மேலும் விசாரணையில், மேடையில் பெண்ணுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது பெண் வீட்டார் பலரிடம் மாப்பிள்ளை தகராறில் ஈடுபட்டுள்ளார். திருமணம் ஆவதற்கு முன்னதாகவே போதையில் ரகளையில் ஈடுபடும் இந்த இளைஞருடன் எங்கள் வீட்டு பெண்ணை கட்டிக் கொடுக்க முடியாது என்று பெண் வீட்டார் கூறி மாப்பிள்ளைக்கு அணிவித்த தங்கச் சங்கிலி, தங்க மோதிரம், தங்க கை கடிகாரம் ஆகியவற்றை திரும்ப பெற்றுக் கொண்டு திருமணத்தை நிறுத்தினர். பின்னர் போலீசார் மணமகனை பாதுகாப்பாக அழைத்து வெளியே சென்றபோது மண்டபத்தில் இருந்த நாற்காலியை மணமகன் தூக்கி வீசியதால் பெண்ணின் உறவினர்கள் கோபமடைந்தனர். இதனால், திருமண மண்டபத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இச்சம்பவம் குறித்து பெண் வீட்டார் தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.