வாலாஜா அருகே அணைக்கட்டில் 5 மாத குழந்தையின் தாயை கொலை செய்த வழக்கில் கைதான கள்ளக்காதலன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ராமாபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த நடராஜன்-சாந்தி தம்பதியினரின் 3-வது மகள் ரேஷ்மாலதா (21). இவருக்கும் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கோபிநாத் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 5 மாத பெண் குழந்தை உள்ளது. தலைப்பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்த ரேஷ்மாலதா மீண்டும் இங்கேயே தங்கியிருந்தார். கடந்த 22ஆம் தேதி குழந்தையை தாயிடம் விட்டு சென்ற ரேஷ்மாலதா, மீண்டும் வீடு திரும்பவில்லை. புகாரின்பேரில் காவேரிப்பாகம் போலீசார் அவரை தேடி வந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி வாலாஜா பாலாறு அணைக்கட்டு பகுதியில் உள்ள சாத்தம்பாக்கம் ஆற்று கால்வாயில் ரேஷ்மாலதா சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் அவரது கள்ளக்காதலன் மேல்விஷாரம் இந்திராகாந்தி நகரை சேர்ந்த குமரன் (28) என்பவர், கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குமரனை கைது செய்தனர்.

விசாரணையில் குமரன் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறுகையில், ”கைதான குமரன் திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளில் மேடை அலங்கார பணி செய்து வருகிறார். ரேஷ்மாலதா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸ் ஆக பணிபுரிந்து வந்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரேஷ்மாலதாவுக்கு, அவரது பெற்றோர் சென்னையை சேர்ந்த கோபிநாத் என்பவருடன் திருமணம் செய்து வைத்தனர். குமரனும் சென்னை வடபழனியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். குமரனின் மனைவி தற்போது 5-மாத கர்ப்பிணியாக உள்ளார். திருமணம் ஆன பிறகும் ரேஷ்மாலதாவுக்கும், குமரனுக்கும் தொடர்பு இருந்தது.

கோபிநாத் வீட்டில் இல்லாதபோது குமரன், ரேஷ்மாலதா வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதற்கிடையே ரேஷ்மாலதா பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்திருந்தார். குழந்தை பிறந்து 5 மாதங்கள் ஆன பிறகும் ரேஷ்மாலதா, அவரது கணவர் வீட்டிற்கு செல்லாமல் இங்கேயே இருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 22ஆம் தேதி ரேஷ்மாலதா தனது 5 மாத குழந்தையை வீட்டில் விட்டு சென்று, எனது கணவருடன் வாழ பிடிக்கவில்லை. எனவே திருமணம் செய்து கொள்ளும்படி குமரனை வற்புறுத்தியுள்ளார். அதற்கு குமரன் மறுத்துள்ளார். ஆனால், ரேஷ்மாலதா தொடர்ந்து திருமணத்துக்கு வற்புறுத்தியதால், வாலாஜா அணைக்கட்டு பகுதிக்கு குமரன் அழைத்துச் சென்று பேசியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ரேஷ்மாலதாவின் கழுத்தை அவரது துப்பட்டாவால் நெரித்து கொலை செய்துவிட்டு சடலத்தை சாத்தம்பாக்கம் ஆற்று கால்வாயில் வீசிவிட்டு சென்றுள்ளார்”. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.