மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 62 அடியாக சரிந்துள்ளது. தினசரியும் ஒரு அடிக்கு மேல் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை தண்ணீரின் மூலம் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்போது 103.35 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது மளமளவென குறைந்து வருகிறது.
வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்து காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை கைகொடுக்கவில்லை. கர்நாடகா அணைகளில் 100 அடிக்கு மேல் நீர் இருந்தாலும் குறைவான அளவே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து நீர்மட்டம் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. கடந்த 2 வாரத்திற்கு முன்பு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதையடுத்து அதிகபட்சமாக காவிரி ஆற்றில் 23ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் வரத்தொடங்கியதால் சுமார் 4 நாட்கள் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அணையில் இருந்து கடந்த ஒரு வாரமாக டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 305 கனஅடியாக மட்டுமே உள்ளது. அணைக்கு மிக குறைந்த அளவில் தண்ணீர் வரும் நிலையில் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு ஒரு அடிக்கு மேல் சரிந்து வருகிறது.
தற்போது அணையில் இருந்து தினமும் 1 டி.எம்.சி.வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையில் இருந்து இன்னும் 20 நாட்களுக்கு மட்டுமே டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறுவை சாகுபடி பயிர்களை காப்பாற்ற முடியுமா என்று காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.