அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்ற சமயம் பார்த்து, இங்குப் பல சம்பவங்கள் அரங்கேறி வருவதால் அவர் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட நிலையில், அதிரடி திருப்பமாக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அதேநேரம், ஓபிஎஸ் தனது ஆதரவாளர்கள் உடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்று சில ஆவணங்களை எடுத்துச் சென்றார். இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சீல் வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சில நாட்களிலேயே ஓபிஎஸ் மகன்கள், ரவீந்திரநாத், ஜெயபிரதீப் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என மொத்தம் 18 பேரைக் கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்ட 22 பேரைக் கட்சியில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்தார். இது கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, சீல் வைக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடியிடம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன் பின்னர் நடந்த சம்பவங்களும் எடப்பாடி தரப்புக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவே இருந்தது. இந்தத் தெம்புடன் எடப்பாடி பழனிசாமி நான்கு நாட்கள் பயணமாக டெல்லி சென்றார். டெல்லியில் அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் கலந்து கொள்ளவே சென்று இருந்தார். மேலும், குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு வெற்றி பெற்றதை அடுத்து, அவரை நேற்று நேரில் சந்தித்தும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். திரௌபதி முர்மு வரும் திங்கட்கிழமை நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பு ஏற்கும் நிலையில், அதிலும் கலந்து கொள்ளவே எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்தார்.

ஆனால், அவர் டெல்லி சென்ற சமயம் பார்த்து இங்குப் பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. முதலில் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவுக்குத் தெரிவிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி செயல்பாடுகளுக்கு எதிராக சசிகலா கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். ரவீந்திரநாத் அதிமுக எம்பியே இல்லை என்று மக்களவை சபாநயருக்கு ஈபிஎஸ் தரப்பு கடிதம் எழுதி இருந்த நிலையில், கட்சியின் ஒரே ஒரு லோக்சபா எம்பியை செயல்படவிடாமல் தடுப்பதாக ஈபிஎஸ் தரப்புக்கு சசிகலா கண்டனம் தெரிவித்திருந்தார்.

மேலும், குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிபிஐ அனுமதி கோரி இருந்த நிலையில், அதற்குத் தமிழக அரசு அனுமதி அளித்தது. மேலும், அதிமுக வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார். இப்படி அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் எடப்பாடி தரப்பு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தனது டெல்லி பயணத்தை முன்கூட்டியே முடித்துவிட்டு, சென்னை திரும்ப உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவர் பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்த நிலையில், திட்டத்தை மாற்றிவிட்டு இரு நாட்களிலேயே அவர் சென்னை திரும்ப உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.