கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத இ-மெயில் கணக்குகளை நீக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் இதற்கான பணிகள் தொடங்க உள்ள நிலையில், நமது இ-மெயில் கணக்குகள் முடக்கப்படாமல் இருக்க செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவில் பள்ளி மாணவர்கள் தொடங்கி முதியவர்கள் வரை அனைவரும் இ-மெயில் முகவரி வைத்துள்ளோம். இன்னும் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட இ-மெயில் முகவரியை வைத்திருக்கிறார்கள். இதில் பலரும் அனைத்து இ-மெயில் முகவரிகளையும் பயன்படுத்துவது இல்லை ஏதாவது ஒன்று அல்லது இரண்டை மட்டுமே நாம் பயன்பாட்டில் வைத்திருப்போம். மற்றவற்றை நாம் பயன்படுத்தாமல் இருப்போம். இப்படி உலகம் முழுவதும் ஏராளமான இ-மெயில் கணக்குகள் பயன்படுத்தாமல் இருக்கிறது.
இத்தகைய இ-மெயில் முகவரிகளை முடக்க உள்ளதாக ஜி-மெயிலின் தலைமை நிறுவனமான கூகுள் அறிவித்துள்ளது. அதாவது குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாக சைன்இன் செய்து பயன்படுத்தப்படாமல் உள்ள இ-மெயில் கணக்குகளை முடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறை அடுத்த மாதம் (டிசம்பர்) தொடங்க உள்ளது. இது மக்கள் மற்றும் கூகுள் நிறுவனத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும், குறிப்பிட்ட இ-மெயில் முகவரி நீக்கப்படும் பட்சத்தில் அதில் இருக்கும் ஆவணங்கள், டிரைவ், மீட், காலண்டர், கூகுள் போட்டோஸ் என அனைத்தும் நீக்கப்பட்டு விடும். முதலில் கூகுள் அலர்ட் செய்யும். அதன்பிறகே அந்த இ-மெயில் முகவரி நீக்கம் செய்யப்படும். அதன்படி அடுத்த மாதம் மட்டும் பல கோடி பேரின் இ-மெயில் முகவரிக்கும் நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதில் இருந்து நாம் எளிதாக தப்பிக்கலாம். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் நம்மிடம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் இ-மெயில் கணக்கை திறந்து அதில் இருந்து சில இ-மெயில்களை பிறருக்கு அனுப்ப வேண்டும். இப்படி அனுப்பும் பட்சத்தில் அந்த இ-மெயில் கணக்கு நீக்கப்படாமல் தப்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.