ஆந்திர மாநிலம் என்டிஆர் மற்றும் பல்நாடு மாவட்டத்தில் காலை 7.26 மணிளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை உணர்ந்த பொதுமக்கள், அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியேறினர். என்டிஆர் மாவட்டத்தில் நந்திகாமா, கஞ்சிகச்சர்லா, சந்தர்லபாடு மற்றும் வீருலபாடு ஆகிய மண்டலங்களில் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. இரண்டு, மூன்று வினாடிகள் நிலம் அதிர்ந்ததாக கூறப்படுகிறது. பல்நாடு மாவட்டம் அச்சம்பேட்டை மண்டலத்தில் உள்ள புளிச்சிந்தலை மடிபாடு, சல்லா கரிகா மற்றும் கிஞ்சப்பள்ளி கிராமங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவாகியுள்ளது. இது பெரிய அளவிளான நிலநடுக்கம் இல்லை என்பதால் மக்கள் பீதியடைய தேவையில்லை என தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தெலங்கானா மாநிலம் சூர்யாபேட் மாவட்டத்தில் உள்ள சிந்தலபாலம் என்ற இடத்தில் உள்ள புலிசிந்தலா நீர்த்தேக்கம் மற்றும் நீர்ப்பாசன திட்டத்திற்கு அருகில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக தெரிகிறது. நிலடுக்கத்தால் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.