பீகார் மாநிலம் அராரியா மற்றும் மேற்கு வங்க மாநிலம் சிரிகுரி பகுதிகளில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் தற்போது அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்தியாவை பொறுத்தமட்டில் நிலநடுக்கங்கள் என்பவை சக்தி வாய்ந்ததாக இல்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படுவது இல்லை. இருப்பினும் கூட பல இடங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது என்பது தொடர் கதையாக இருக்கிறது. குறிப்பாக வடஇந்திய மாநிலங்களில் ஆங்காங்கே மக்கள் நிலஅதிர்வை உணர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் தான் இன்று பீகார் மாநிலம் அரரியாவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 5.35 மணிக்கு அராரியா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தை மக்கள் லேசாக உணர்ந்நததாக கூறப்படுகிறது. மேலும், அராரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை தேசிய நிலஅதிர்வு மையமும் உறுதி செய்துள்ளது. இதுபற்றி அந்த மையம், “இன்று காலை 5.35 மணிக்கு அராரியாவில் பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 4.3 என்ற அளவில் பதிவாகி உள்ளது” என தெரிவித்துள்ளது.