அவசரமான காலை நேரங்களில் பாத்திரம் அடிப்பிடிப்பது சாதாரண விஷயம் தான். ஆனால், அப்படி அடிபிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்வது என்பது சாதாரண காரியம் இல்லை. அப்படி அடிபிடித்த பாத்திரத்தை சரியாக கழுவாமல் சமைத்துவிட்டால், சமைத்த உணவில் ஒரு வகையான அடிபிடித்த நாற்றம் வீசும். இதனால் அடிப்பிடித்த பாத்திரத்தை சுத்தமாக கழுவி விட வேண்டும். ஆனால், பலர் அதிகம் அடிபிடித்த பாத்திரத்தை கழுவ முடியாமல் அப்படியே வைத்து விடுவார்கள். அதில் சமைக்க மாட்டார்கள். மாறாக, அதில் செடி வளர்ப்பது அல்லது செலப்பிராணிகளுக்கு சாப்பாடு வைக்க, அல்லது கோலப்பொடி வைக்க பயன் படுத்திக்கொள்வார்கள்.
ஆனால் இனி நீங்கள் அப்படி செய்ய வேண்டாம். எவ்வளவு அடிபிடித்த பாத்திரமாக இருந்தாலும் எப்படி சுலபமாக கழுவலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக் கொள்ளுங்கள். அந்த வகையில், அடிபிடித்த பாத்திரத்தை சுலபமாக கழுவுவதற்கு சில பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்தால் மட்டும் போதும். அவை பாத்திரத்தில் இருக்கும் விடாப்படியான கறையை எளிதில் நீக்கிவிடும். மேலும் பாத்திரம் பார்ப்பதற்கு பளபளப்பாக புதுசு போல் இருக்கும். இப்போது அடிப்பிடித்த பாத்திரத்தை சுலபமாக சுத்தம் செய்ய என்னென்ன பொருட்களை பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
பேக்கிங் சோடா, எந்த விடாப்படியான கறையாக இருந்தாலும் சரி, இந்த ஒரு பொருள் இருந்தால் சுலபமாக சுத்தம் செய்து விடலாம். இதற்கு முதலில், தண்ணீரில் சிறிது பேக்கிங் சோடாவை கலந்து, அதை அடிபிடித்து பாத்திரத்தில் ஊற்றி ஊற வைத்து விடுங்கள். சுமார் 20 நிமிடங்கள் கழித்து பாத்திரத்தை ஸ்க்ரப் கொண்டு தேய்த்தால் போதும், எவ்வளவு பெரிய விடாப்பிடியான கறையையாக இருந்தாலும் சுலபமாக நீங்கிவிடும்.
வினிகர், இதுவும் அடிப்பிடித்த பாத்திரத்தை கழுவ ஒரு சிறந்த தேர்வு. ஏனெனில், வினிகரில் அசிடிட்டி ஆசிட் உள்ளதால், இது பாத்திரத்தில் உள்ள விடாப்படியான கரையை விரைவாக நீக்கி விடும். குறிப்பாக, அலுமினிய பாத்திரத்தில் படிந்துள்ள கறைகளை நீக்க இது தான் சிறந்த தேர்வு. வினிகர் உங்கள் வீட்டில் இல்லையென்றால், நீங்கள் எலுமிச்சையை பயன்படுத்தலாம். இதற்கு எலுமிச்சை சாறை அடிபிடித்த பாத்திரத்தில் ஊற்றி, சுமார் 15 நிமிடம் ஊற வையுங்கள். பின்னர், ஸ்க்ரப் வைத்து தேய்த்தால், பாத்திரத்தில் உள்ள கறை எளிதில் நீங்கிவிடும்.
இது மட்டும் இல்லாமல், நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் உப்பு, தக்காளி சாஸ், தயிர் ஆகியவை பயன்படுத்தியும் அடிபிடித்த பாத்திரத்தை சுலபமாக நீக்கி விடலாம். அதிலும் குறிப்பாக ஸ்டீல் பாத்திரத்தில் இருக்கும் கறையை சீக்கிரமாகவே நீக்கிவிடலாம். நீங்கள் இந்த பொருள்களை அடிபிடித்த பாத்திரத்தில் தடவி, 20 நிமிடங்களுக்கு பிறகு கழுவினால் பாத்திரத்தில் உள்ள விடாப்படியான கரைகள் நீங்கி விடும். இதற்கு நீங்கள் கடினமாக தேய்க்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது.