உர ஆலையை அகற்ற கோரி 5 கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்த நிலையில் தற்காலிகமாக மூட ஆட்சியர் ஆணையிட்டுள்ளார்.
நாட்டின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தலின் நேற்றைய தினம் 21 மாநிலங்கள் உட்பட 102 தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது. இதில் தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களுக்கும் ஒரே கட்டமாக நேற்றைய தினம் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. அமைதியாக நடந்த வாக்குபதிவில், சில இடங்களில் மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். அந்த வகையில் மதுரை திருமங்கலம் கே.சென்னம்பட்டியில் உள்ள உர ஆலையை அகற்ற கோரி 5 கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
மதுரை திருமங்கலம் கே.சென்னம்பட்டியில் உள்ள உர ஆலையில் கழிவுகளால் மக்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்தனர். கோழிக் கழிவில் உரம் தயாரிக்கும் அந்த நிறுவனத்தில் துர்நாற்றம் வீசியதால் நிறுவனத்தை மூடவலியுறுத்தி மக்கள் போராட்டமும் நடத்தி வந்தனர்.
கேரளாவைச் சேர்ந்தவர்களால் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் முதலில் விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டது, அங்கு பொதுமக்கள் எதிர்த்ததால் , அங்கிருந்து ஓராண்டுக்கு முன்பு தான் கே.சென்னம்பட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அப்போதே கிராமமக்கள் இந்த உர அலையை எதிர்த்தனர்.
மதுரை உட்பட சுற்றுவட்டாரத்தில் கோழி கழிவுகள் சேகரிக்கப்பட்டு இங்கு கொண்டுவரப்படும். இங்கு வேகவைத்து, அரைத்து உரமாக மாற்றப்படுகிறது. இந்த உரம் கேரளாவில் உள்ள தேயிலை, ஏலக்காய் தோட்டங்களுக்கு அடி உரத்திற்காக செல்கிறது. இந்த உர ஆலையை மக்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்படுவதாக மக்கள் புகார் அளித்தனர். சில நாட்களுக்கு முன் போராட்டமும் நடத்தினர்,
மேலும் ஆலையை மூட கோரி கே.சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, ஆவல்சுரன்பட்டி, பேய்குளம், உன்னிபட்டி உள்ளிட்ட 5 கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்ததால், 5,050 வாக்குகள் நிறைந்த இடத்தில் 167 வாக்குகள் மட்டுமே பதிவானது. வாக்கு சதவீதம் குறைந்ததால் அந்த தொகுதியின் எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார் ஆலையை மூடக்கோரி ஆட்சியருக்கு கடிதம் எழுதினார்.
எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார் கடிதத்திற்கு பதிலளித்த ஆட்சியர் சங்கீதா ஆலையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுசூழல் பொறியாளர்கள், மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படியும் ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.