அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும், கண்டம் விட்டு கண்டம் பாயும், ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அடிக்கடி அதிர்ச்சி தரும் நாடு வடகொரியா. குறிப்பாக, அதன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் விதமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
இதனிடையே, அணு ஆயுத வல்லமை பொருந்திய அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல் நேற்று முன் தினம் தென் கொரியாவுக்கு வந்தடைந்தது. ராணுவ பயிற்சிக்காக அமெரிக்க போர் கப்பல் தென் கொரியா வந்துள்ளது. இந்நிலையில், தென் கொரியாவிற்கு அமெரிக்க போர் கப்பல் வருகைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா நேற்று ஏவுகணை சோதனை நடத்தியது.
குறுகிய தொலைவு இலக்கை தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணையை ஏவி வடகொரியா சோதனை நடத்தியுள்ளது. இந்த தகவலை தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய சம்பவத்தால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.