போலி சாமியார்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நானே கடவுள் என்று கூறி மகாவிஷ்ணு போல வேஷம் போட்டு பாம்பு படுக்கையில் படுத்துக்கொண்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேதரர் மாதிரி ஏமாற்றி கால் அமுக்கி விடச்சொல்லி அட்டகாசம் செய்து மக்களை ஏமாற்றிய போலி சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலி சாமியார்கள் நாடு முழுவதும் பரவி கிடக்கின்றனர். எத்தனையோ சாமியார்கள் சித்து வேலை செய்து மக்களை ஏமாற்றி பண மோசடி செய்து கடைசியில் காவல்துறையிடம் சிக்கிக்கொள்வார்கள். சிலரோ குறி சொல்வது போல ஏமாற்றி செய்வினை, பில்லி சூனியம் எடுக்கிறேன் என்று பணம் வசூலித்து விடுவார்கள். சிலரோ பெண் பிள்ளைகளை குறிவைத்து ஏமாற்றி மோசடி செய்வார்கள். ஏமாந்தவர்கள் பலர் காவல்நிலையம் வரை செல்வதில்லை. சிலர்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்து கம்பி எண்ண வைப்பார்கள்.
நானே கடவுள் என்று சொல்லி மகாவிஷ்ணு வேஷம் போட்டு மக்களை ஏமாற்றிய நபரை கைது செய்துள்ளனர் செஞ்சி காவல்நிலைய காவல்துறையினர். சந்தோஷ்குமார் என்ற அந்த நபர், தான் பூமியில் மனித உருவத்தில் அவதரித்தவர் என்று சொன்னதோடு தனது 2 மனைவியரை ஸ்ரீதேவி, பூதேவி என்று கூறியுள்ளார். பாம்பு படுக்கையில் படுத்து இரண்டு மனைவியரையும் கால் அமுக்கி விடுவது போல போஸ் கொடுக்க வைத்து போட்டோ சூட் நடத்தியுள்ளார். நடக்க முடியாதவர்களை நடக்க வைப்பதாகவும் பேச முடியாதவர்களை பேச வைப்பதாகவும் கூறி நாடகமாடி பணம் பறித்துள்ளார் சந்தோஷ் குமார். இவரிடம் ஏமாந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் செஞ்சி சந்தோஷ்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாற்கடலில் பாம்பு படுக்கையில் படுத்து போஸ் கொடுத்த சந்தோஷ்குமார் தற்போது சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.