உடல் நலக்குறைவு காரணமாக நெல்லையில் நேற்று காலமான அதிமுக அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் நேரில் மரியாதை.
அதிமுக நிர்வாகியும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான கருப்பசாமி பாண்டியன், நேற்று காலை நெல்லையில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் காலமானார். அவரது மறைவு கட்சித் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் கருப்பசாமி பாண்டியன் மறைவிற்கு தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் இருந்து திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கருப்பசாமி பாண்டியனின் உடலுக்கு இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி கடம்பூர் செ. ராஜு, அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர் இசக்கி சுப்பையா, திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலர் தச்சை என். கணேசராஜா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அஞ்சலி செலுத்தினார்.
யார் இந்த கருப்பசாமி பாண்டியன்? அதிமுகவில் இருந்து 1977, 1980 தேர்தல்களில் சட்டப்பேரவைக்கு தேர்வான இவர், 2000ம் ஆண்டில் கட்சியில் இருந்து நீக்கப்படவே, திமுகவில் இணைந்தார். 2006 தேர்தலில் தென்காசி தொகுதியில் இருந்து திமுக எம்.எல்.ஏ.வாக தேர்வான இவர், 2015ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். 2016-ல் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பிய அவருக்கு, சசிகலா பொதுச் செயலாளராக இருந்தபோது அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், 2017ல் கட்சியில் இருந்து விலகி 2020ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் இணைந்தார்.