அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓபிஎஸ் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இருதரப்பு வாதங்களும் கடந்த 22ஆம் தேதி முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று காலை நீதிபதி கே.குமரேஷ்பாபு தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவித்தார். ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 4 இடைக்கால மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதனை அதிமுக தொண்டர்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்திய அலுவலர்களான நத்தம் விஸ்வநாதன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் இருந்து அதிமுக பொதுச்செயலாராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான வெற்றிச் சான்றிதழை எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொண்டார். அப்போது, அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் அணிந்திருப்பது போன்ற தொப்பியையும், கண்ணாடியையும் தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு அணிவித்தனர். அதனை எடப்பாடி பழனிசாமி மிகுந்த மகிழ்ச்சியுடன் அணிந்துகொண்டார்.