உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா விளையாடப் போகிறது என தெரிந்ததுமே ரசிகர்கள் நவீன் உல் ஹக்கும், விராட் கோலியும் 6 மாதங்களுக்குப் பிறகு சந்தித்துக் கொள்ளப் போகிறார்கள் என்பதில் தான் ஆர்வமாக இருந்தனர்.
இந்நிலையில், நேற்று மைதானத்திற்கு நவீன் உல் ஹக் பேட்டிங் செய்ய வந்ததிலிருந்து ரசிகர்கள் கோலி! கோலி! என கத்தி வெறுப்பேற்றினர். ஆனால், இதனை நவீன் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, நவீன் உல் ஹக் பந்து வீச வந்த போது விராட் கோலி பேட்டிங்கில் இருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் மீண்டும் கோலி, கோலி என கத்தி கூச்சலிட்டனர். பிறகு நவீன உல் ஹக்கை விமர்சிக்கும் வகையில் தகாத வார்த்தையை சிலர் பயன்படுத்தினர்.
இதனை கவனித்த விராட் கோலி உடனடியாக ரசிகர்களிடம் தயவு செய்து அவ்வாறு செய்யாதீர்கள். அனைவரும் கைத்தட்டி உற்சாகப்படுத்துங்கள். நவீன் உல் ஹக்கை கேலி செய்ய வேண்டாம் என சைகையால் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். விராட் கோலியின் இந்த செயலை பார்த்து ரசிகர்கள் கிண்டல் செய்வதை நிறுத்திக் கொண்டு ஆதரவளித்தனர். தம்மை எதிர்த்த வீரரை கூட மதிப்பளிக்கும் வகையில் விராட் கோலி இன்று ரசிகர்கள் மத்தியில் இவ்வாறு கிண்டல் செய்ய வேண்டாம் என சொன்னது அவருடைய மனசு எந்த அளவுக்கு சொக்கத்தங்கமாக இருக்கிறது என்பதை காட்டுகிறது.
இவ்வாறு நடைபெறுவது முதல் முறையல்ல. 2019இல் உலக கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தை இந்திய ரசிகர்கள் சிலர் கிண்டல் செய்தனர். அப்போது அங்கு இருந்த விராட் கோலி இவ்வாறு செய்ய வேண்டாம். இந்த தவறை செய்யாதீர்கள் என கூறியிருந்தார். தற்போது மீண்டும் அதே போல் நவீன் உல் ஹகுக்கு ஆதரவாக விராட் கோலி பேசி இருப்பது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.