தெலங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் எப்படியும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முதல்வர் சந்திரசேகர ராவ் போராடி வருகிறார். அந்த வகையில், பிஆர்எஸ் கட்சியின் சார்பில் துப்பாக் சட்டசபை தொகுதிக்கு மேடாக் எம்பி பிரபாகர் ரெட்டி அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் இன்று தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவர், சித்திபெட் மாவட்டத்தில் தவுலதாபாத் பகுதியில் சுரம்பள்ளி கிராமத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். கூட்டத்தில் மர்ம நபர் வேட்பாளர் பிரபாகர் ரெட்டிக்கு கை குலுக்க சென்றார். இதையடுத்து, அவரும் கை கொடுத்தார். அப்போது திடீரென அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரபாகர் ரெட்டியை குத்தினார்.
இதில் அவருக்கு வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனே கட்சி நிர்வாகிகளும் பிரபாகர் ரெட்டி ஆதரவாளர்களும் அந்த நபரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். அந்த மர்மநபரின் பெயர் ராஜு என தெரியவந்தது. அவர் கத்தியால் ஏன் குத்தினார் என தெரியவில்லை. இதையடுத்து பிரபாகர் ரெட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கத்திக்குத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.