ஆகஸ்ட் 1 ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியனைக் கூண்டோடு நீக்கி பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமியை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி உட்பட அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோரைச் சமீபத்தில் நீக்கி ஓபிஎஸ் அறிவித்தார். ஆனால், வைத்தியலிங்கத்தை அதே பொறுப்பில் ஓ.பன்னீர்செல்வம் நியமித்தார். மேலும், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் துணை ஒருங்கிணைப்பாளர்களாகவும் நியமித்திருந்தார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி நீக்கம், வைத்தியலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியனின் நியமனம் குறித்துத் தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தகவல் அனுப்பியுள்ளது. சமீப காலமாக ஓபிஎஸ் தரப்பு இபிஎஸ் தரப்பு எதிராகவும், இபிஎஸ் தரப்பு ஓபிஎஸ் தரப்புக்கு எதிராகவும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று அதிமுக பொதுக்குழு விவகாரத்தை மீண்டும் உயர்நீதிமன்றத்துக்கே திருப்பி அனுப்பி இந்த விவகாரத்தில் 3 வாரத்தில் விசாரித்து முடிக்க உத்தரவிடுவதாகவும், அதுவரை தற்போதைய நிலையே தொடர வேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பதுரை ஆகியோர் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனையில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.