2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இறுதி கட்ட வாக்குப்பதிவுகள் ஜூன் 1 ஆம் தேதி முடிவடைந்து ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளியாகும்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் அதன் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகளும் இந்த தேர்தலில் மோதுகிறது. பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை பெரும்பாலான மாநிலங்களில் அதன் கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு முடிந்து விட்டது. மேலும் அந்தக் கட்சி இரண்டு கட்டமாக வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டு இருக்கிறது.
2024 ஆம் வருடத் தேர்தல் குறித்து தனது கருத்தை வெளியிட்ட பிரதமர் மோடி 370 தொகுதிகளுக்கு மேல் பாரதிய ஜனதா கட்சி தனித்து வெற்றி பெறும் என தெரிவித்திருந்தார். மேலும் தங்களது தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறும் எனவும் கூறினார். பொதுத் தேர்தல்களில் வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்கு சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாட்களாக வலுத்து வருகிறது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்றால் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் தேர்தல் நடைபெற வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் டெரிக் ஓ பிரையன். 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் குறித்து பேசிய இவர் தேர்தல் ஆணையம் பாரதிய ஜனதா கட்சியின் மற்றொரு அலுவலகமாக விளங்குகிறது என குற்றம் சாட்டினார். பொதுமக்கள் தேர்தலை சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் சந்திக்க வேண்டும் என்றால் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் டிஎம்சி மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.