அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் இரு மாநில சட்டப்பேரவை தேர்தல் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை தேதியில் மாற்றம் செய்துள்ளது ஆணையம்.
தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் மக்களவை மற்றும் 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டது. இதில் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணையும் அடங்கும். அதன்படி இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு தேதி 19.04.2024 அன்றும், வாக்கு எண்ணிக்கை நாள் 04.06.2024 அன்றும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவுகளின்படி , சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்களை அவற்றின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பு தேர்தல் ஆணையம் நடத்தி முடிக்க வேண்டும். அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய இரு மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் 02.06.2024 அன்று முடிவடைகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டப் பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் அட்டவணையில் திருத்தம் செய்யப்படுகிறது. அதன்படி வாக்கு எண்ணிக்கை தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரு மாநில சட்டப் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 4 ஜூன், 2024 அன்று நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு மாநில சட்டப்பேரவை தேர்தல் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை 2 ஜூன், 2024 அன்று நடைபெறும். அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் அட்டவணையில் மாற்றம் எதுவும் இல்லை. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி இந்த இரு மாநிலங்களில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் 4 ஜூன், 2024 அன்று எண்ணபட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.