மாடு வியாபாரியிடம் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்.
ஈரோடு மரப்பாலம் அருகே அதிகாலையில் வாகன சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படையினர், தேனியில் இருந்து கருங்கல்பாளையம் சந்தையில் மாடு வாங்க வந்த கோபிநாத் என்பவரிடம் இருந்த ரூ.1,05,000 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
பணத்தை எப்படி திரும்ப பெறுவது…?
அரசியல் கட்சிகள் வாக்காளர்களின் வாக்குகளை விலைக்கு வாங்க பணம் கொடுப்பதை தடுப்பதற்காக சிறப்பு தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிய ரூ.50,000-த்தை விட அதிகமாக பணம், நகை அல்லது பொருட்களை ஆவணமின்றி எடுத்துச் சென்றால் அதனை பறிமுதல் செய்வார்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட பணமோ பொருளோ ரூ.10 லட்சத்திற்குள் மதிப்பிடப்பட்டால் அவை மாவட்ட கருவூலத்தில் வைக்கப்படும். அதற்கு மேல் மதிப்புள்ள பணம் அல்லது பொருட்கள் பிடிபட்டால் அதனை தேர்தல் அதிகாரிகள் வருமான வரிதுறையினரிடம் சமர்ப்பித்து விடுவார்கள். சம்பந்தப்பட்ட நபர் அல்லது நிறுவனம் அதற்கான உரிய ஆவணங்களை வருமான வரி துறையினரிடம் காண்பித்து தங்களுடைய பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.