2025 மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அல்ட்ரா வயலட்டின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான ‘டெசராக்ட்’ இரண்டே வாரங்களில் 50,000 முன்பதிவுகளை பெற்று சாதனைப் படைத்துள்ளது.
Ultraviolette Tesseract Electric Scooter : அல்ட்ரா வயலட்டின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெஸராக்ட் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், 14 நாட்களில் 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பெங்களூருவை தளமாகக் கொண்ட EV ஸ்டார்ட்அப்பின் முதல் மின்சார ஸ்கூட்டர் ஆகும். மேலும், இது அடிப்படை டெசராக்ட் 3.5 வகைக்கு ரூ.1,45,000 (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் வழங்கப்பட்டது.
இருப்பினும், முதல் 10,000 யூனிட்டுகளுக்கு, இ-ஸ்கூட்டரின் அறிமுக விலை ரூ.1,20,000 ஆகும். பிறகு அடுத்த 50,000 யூனிட்டுகளுக்கு ரூ.1,30,000 என விலை நிர்ணயிக்கப்பட்டது. இப்போது ஸ்கூட்டர் 50,000 முன்பதிவைத் தாண்டிவிட்டதால், ரூ.1,30,000 விலை அடுத்த 10,000 யூனிட்டுகள் வரை செல்லுபடியாகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.
ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் :
அல்ட்ரா வயலட்டின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெஸராக்ட், முழுமையாக சார்ஜ் செய்தால், 261 கிமீ வரை பயணிக்கலாம். இதில், 20 ஹெச்பி பவரை அளிக்கும் வகையில் மின்சார மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 0 முதல் 60 கிமீ வேகத்தை 2.9 வினாடிகளில் இந்த ஸ்கூட்டர் தொட்டுவிடும். அதிகபட்ச வேகம் மணிக்கு 125 கிமீ ஆகும். இந்த ஸ்கூட்டர் ரூ.100 செலவில் 500 கிமீ ஓடும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிவிஎஸ் எக்ஸ்-க்குப் பிறகு ஏபிஎஸ் பெறும் இரண்டாவது மின்சார ஸ்கூட்டர் இதுவாகும். ஸ்கூட்டரில் மோதல் எச்சரிக்கைகளை வழங்க அதிர்வுறும் ஒரு ஹேப்டிக் ஹேண்டில்பாரும் உள்ளது. இந்த ஆடம்பரமான அம்சங்களில் பெரும்பாலானவை டாப்-எண்ட் வேரியண்டில் மட்டுமே கிடைக்கக்கூடும். அல்ட்ரா வயலட் டெசராக்ட், சந்தையில் உள்ள மற்ற பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களான ஓலா எஸ்1 ப்ரோ பிளஸ் மற்றும் ஏதர் 450 எக்ஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.