நீலகிரி மாவட்டம் முதுமலை தேசிய பூங்காவில், வனத்துறை மற்றும் இந்திய வன உயிரின அறக்கட்டளையான டபிள்யு.டி.ஐ. சார்பில் பயிலரங்கம் நடைபெற்றது. இதில், ஊட்டி அரசு கல்லூரியின் வன உயிரின துறை தலைவர் பி.ராமகிருஷ்ணன் பேசுகையில், ”இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளில் தான் யானைகள் உள்ளன. இந்தியாவில் 27,312 யானைகள் உள்ளன. தமிழ்நாட்டில் 2,761 யானைகளே உள்ளன. உணவு தேவை இருந்தால் மட்டுமே, ஒரு பகுதி வனப்பகுதியாக தொடர முடியும். இதை சார்ந்து தான் பிற வன உயிரினங்கள் வாழ முடியும்.
உணவு தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக யானைகள் வேறு இடங்களுக்கு செல்கின்றன. இதற்கான வழித்தடங்களை பாதுகாப்பது மிக அவசியம்“ என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து டபிள்யு.டி.ஐ., செயல் இயக்குனர் விவேக் மேனன் பேசுகையில், ”இயற்கையிலேயே, யானைகளின் அறிவுத்திறன் மேம்பட்டதாக உள்ளது. இதனால் தான் அவை, தலைமுறைகள் கடந்தும் தங்கள் வழித்தடத்தை மறக்காமல் உள்ளன. மனிதர்கள் போன்று, அடுத்தடுத்த தலைமுறைகளில், யானைகளின் அறிவுத்திறன் மேம்பட்டு வருகிறது. இதனால் தான், மனிதர்களின் தடுப்பு நடவடிக்கைகள் முறியடிக்கப்படுகின்றன” என்றார்.
இதனைத் தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் அருண்குமார் பேசுகையில், ”யானைகளின் பாரம்பரிய வழித்தடங்களை மீட்பதன் மூலம் விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் யானைகள் நுழைவதை, படிப்படியாக தடுக்க முடியும். இந்த விஷயத்தில் அனைவரும் புரிதலுடன் செயல்பட வேண்டும்” என்று கூறினார்.
மனிதர்களிடம், இன்றைக்கும் நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யும் பழக்கம் உள்ளது. இப்படி நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தால், பிறக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள், குறைபாடுகள் ஏற்படும் என்று மருத்துவ ரீதியாக கூறப்படுகிறது. ஆனால், இந்த விஷயத்தை, யானைகள் பாரம்பரியத்தை பின்பற்றி வருகின்றன.
இதுகுறித்து வன உயிரின வல்லுனர்கள் கூறுகையில், ”பெரும்பாலும் பெண் யானை கள் தான், குழுக்களை வழிநடத்தும். குட்டிகளை ஈன்று வளர்த்து வரும் பெண் யானை, வளர்ந்த ஆண் குட்டிகளை, குறிப்பிட்ட காலத்துக்கு பின், வெளியேற்றிவிடும். அது அந்த கூட்டத்தில் வேறு பெண் யானைகளுடன் சேர்ந்து இன பெருக்கம் செய்யக் கூடாது என்பதே, இதன் அடிப்படை கருத்தாக உள்ளது. இதனால் தான், யானைகளில் அடுத்தடுத்த தலைமுறைகள் உடல் மற்றும் அறிவு ரீதியாக மேம்பட்ட நிலையில் இருக்கிறது” என்றனர்.